அபிராமி அந்தாதி பாடல் 75
அபிராமி அந்தாதி பாடல் 75
தங்குவர்,
கற்பகத் தாருவின் நீழலில்;
தாயர் இன்றி
மங்குவர்,
மண்ணில் வழுவாப் பிறவியை;
மால் வரையும்,
பொங்குவர் ஆழியும்,
ஈரெழ் புவனமும்,
பூத்த உந்திக்
கொங்கு இவர்
பூங்குழலாள் திருமேனி
குறித்தே
#பொருள்
பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் பெற்றெடுத்த ஏ அபிராமி! மணம் வீசும் பூவையணிந்த குழலுடையவளே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர் சகலத்தையும் தருகின்ற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர். அத்தகைய பல பிறவிகளில் பெற்றெடுக்கும் மானிடத் தாயாரும் இல்லாமல் போவர் (என்றும் நிலையாகிய தாய் நீயே).
#பொருளுரை
அபிராமியை, ஈரேழ் புவனங்களையும், மலைகளையும், கடலையும் என இந்த உலகங்களையெல்லாம் படைத்த அந்த அபிராமியை இடை விடாது தியானிப்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? என்ன கிடைக்காது? சொல்லுகிறார் பட்டர்.
அவர்கள், கற்பக மரங்களின் நிழலிலே இருப்பார்கள். அதே சமயம், அவர்களுக்கு, இந்த மண்ணிலே, பிறவி என்பதே வாய்க்காது. இந்த மண்ணில், மற்றொரு தாய் என்பதே அவர்களுக்கு கிடையாது.
கற்பக மரம் எங்கே இருக்கும்? தேவர்களின் உலகிலே. அபிராமியை இடைவிடாது தியானம் செய்பவர்களுக்கு அந்த உலகம், அமரர்கள் உலகம் நிச்சயம் என்று சொல்லுகிறார் பட்டர். அந்த உலகு நிச்சயம் என்றால், அது எவ்வளவு நாளுக்கு என்ற கேள்வி எழும். அதற்கும் பதில் சொல்கிறார் : அப்பா! அந்த அபிராமியை இடைவிடாது தியானம் செய்பவர்களுக்கு, மற்றொரு பிறவி என்பதே கிடையாது. இந்த மண்ணில் வந்து பிறப்பதற்கு, ஒரு தாயார் வேண்டுமல்லவா? அவர்களுக்கு, அந்த அபிராமி தவிர வேறொரு தாயாரே கிடையாதே! அதனால், இந்த மண்ணில் அவர்களைப் பிறப்பெடுக்க வைக்க வேறு ஒரு தாயார் இல்லாமல் போய், அவர்களுக்கு மறு பிறப்பு என்பதே இல்லாமல் போய்விடும். என்னேரமும், அந்த அமரர்கள் இருக்கும் அந்த இடத்திலே, கற்பக மரங்கள் அடர்ந்திருக்கும் அந்த சோலையிலே இருந்து கொண்டு, அபிராமி அன்னையை தியானம் செய்து கொண்டே இருக்கலாம் என்று சொல்லுகிறார் பட்டர்.
Posted 2nd November 2012 by vishy

Comments
Post a Comment