அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? :

 பரமச்சார்யாளின் தெய்வத்தின் குரல்

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? :

தெய்வத்தின் குரல் (முதல் பகுதி) பகுதி-3.

மூன்றாவதாக இன்னொரு திருஷ்டாந்தம்.

“சமுத்திரத்துக்கு அதன் தீர்த்தத்தையே எடுத்து ஸ்நானம் செய்விக்கிற மாதிரி, 

உன்னை இந்த ஸ்துதியால் புகழ்கிறேன்” என்கிறார்.

ராமேசுவரத்திற்குப் போனால் சேதுவில் சமுத்திர பூஜை செய்வார்கள். 

அப்போது பூஜா அங்கமாக சமுத்திரத்திற்கு அபிஷேகம் பண்ணுவார்கள் – 

அந்தப் பெரிய சமுத்திரத்திலிருந்தே துளிபோல எடுத்து, 

அதற்கே ஸ்நானம் செய்வார்கள். 

வாக் சமுத்திரமாக இருக்கிற அம்பிகைக்கு அதிலிருந்தே கொஞ்சத்தை எடுத்து, 

துதி செய்வதாக ஆசார்யாள் சொல்கிறார். 

அந்த ஜலம் பூஜை செய்கிறவருக்கா சொந்தம்? 

சமுத்திரத்துக்கே சொந்தமானதை எடுத்து அதற்கே மீண்டும் தருகிறாராம்!

அவள் கொடுத்த வாக்காலேயே அவளைத் துதிக்கிறோமே ஒழிய,

இதில் தாமாகச் செய்தது எதுவுமே இல்லை என்று #அடக்கத்து#டன் சாக்ஷாத் ஈசுவராவதாரமான ஆசார்யாள் சொல்கிறார்.

‘சந்திரன் இல்லாவிடில் எப்படி சந்திர காந்தக் கல் ஜலம் வடிக்காதோ அப்படி அவளருளின்றி இந்த வாக்கில்லை.

 பெரிய சமுத்திரத்திலிருந்து கையளவு ஜலம் எடுக்கிற மாதிரி வாக்கு சாகரத்திலிருந்தே இந்த வாக்கை எடுத்திருக்கிறோம். 

இதனால் அவள் மகிமையை விளக்கியதாக நினைப்பது,

கர்ப்பூரத்தால் சூரியனைக் காட்டிக் கொடுப்பதாக எண்ணுகிற பரிஹாஸத்துக்குரிய செயல்தான்’ என்பதெல்லாம் சுலோகத்தின் தாத்பரியம்.

அவதார புருஷர்களும் அம்பாளிடம் இப்படி அடங்கிப் பேசுகிறார்கள்.

அப்படி இருக்க நமக்கு எதைப் பற்றியும் அகங்காரம் கொள்ள ஏது நியாயம்? 

நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகம் புகழ் மாலை போடுகிறது. 

அதே சமயத்தில் நமக்குத் தலைகனம் ஏறத்தான் தொடங்கும். 

அப்போது நமக்குச் சக்தி உண்டா என்று யோசிக்க வேண்டும். 

எந்த இடத்திலிருந்து நம் சக்தி வந்ததோ, அந்த அம்பாள் இருக்க, புகழுக்குப் பாத்திரராகி அகம்பாவப்பட நமக்குக் கொஞ்சம்கூட உரிமையில்லை என்று உணர வேண்டும். 

வருகிற பெருமையை எல்லாம் அவற்றுக்குறிய #பராசக்தி#யின் பாதாரவிந்தங்களிலேயே அர்ப்பணம் செய்துவிட வேண்டும். 

பெருமைப் பூரிப்பில் இருப்பதைவிட, இப்படி அர்ப்பணம் பண்ணிப் பாரம் இல்லாமல் லேசாக ஆவதுதான் நமக்கே பரம சௌக்கியமாக இருக்கும். 

நமக்கு அகம்பாவமே இல்லை என்கிற எண்ணம் வந்து அதில் ஒரு பூரிப்பு உண்டாகிவிட்டால்,

அதுவும்கூட அகம்பாவம்தான். எனவே அகம்பாவம் தலை தூக்க இடமே தராமல் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

எத்தனை கண் குத்திப் பாம்பாக இருந்தாலும், துளி இடுக்குக் கிடைத்தால்கூட ஏதோ ஒரு ரூபத்தில் நமக்கே தெரியாமல் அஹம்பாவம் உள்ளே புகுந்து விடும். 

இது போகவும் அவள் அருள்தான் வழி. 


அவளையே வேண்டி இப்படியாக நம் புகழையெல்லாம் அவளுக்கு அர்ப்பணம் பண்ணிவிட்டால், 


நமக்கு ஒரு குறைவுமில்லாமல் மேலும் மேலும் அவள் அநுக்கிரஹம் கிடைக்கும்.


#ஓம்அம்பாளின்பாதாரவிந்தசரணம்#.

Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்