அபிராமிஅந்தாதிபாடல்-68.
அபிராமிஅந்தாதிபாடல்-68.
பாரும்,
புனலும்,
கனலும்,
வெங்காலும்,
படர் விசும்பும்,
ஊரும்
முருகு சுவை ஒளி
ஊரு ஒலி ஒன்றுபடச்
சேரும் தலைவி,
சிவகாம சுந்தரி, சீரடிக்கே
சாரும் தவம்,
உடையார் படையாத
தனம் இல்லையே.
பொருள்:-
அபிராமி! நீ
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐவகைப் பூதங்களாகவும்,
சுவை,
ஒளி,
ஊறு,
ஓசை,
நாற்றம் என்ற அவைகளின் தன்மையாகவும் நிற்கக் கூடியவள்.
சுந்தரியே! உன்னுடைய செல்வம் பொருந்திய திருவடிகளைச் சார்ந்தவர்கள் சிறந்த தவத்தைப் பெறுவர்.
அத்துடன் அவர்கள் அடையாத செல்வமும் இல்லை எனலாம் (எல்லாச் செல்வமும் பெறுவர்).
பொருளுரை:-
அந்த அபிராமி, அந்த உமையவள், அந்த சிவகாம சுந்தரி எங்கு இருக்கிறாள்? எவ்விதம் இருக்கிறாள்?
நிலம்,நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களாக இருக்கிறாள் அவள். ஊறு, ஒளி, ஒலி, சுவை, மணம் என ஐந்து உணர்வுகளாகவும் அவளே இருக்கிறாள்.
இப்படி, எங்கும் நிறைந்திருக்கும் அபிராமி அன்னையின் பாதம் பணிவார்கள் அடையமுடியாத செல்வமே இல்லை.
மேலாகப் பார்க்கும்போது,
இந்தப் பாடலின் பொருள்,
'அந்த அபிராமி அன்னையைப் பணிபவர்கள் அனத்து செல்வங்களும் பெறுவர்'
என்று சொல்வதுபோல் மட்டும்தான் தோன்றும். ஆம்.
அந்த அன்னை, நமக்கு அனத்தும் தருபவள் தான்.
அந்த அன்னையை விட்டால், யாரால் நமக்கு வேண்டியவற்றைத் தர முடியும்?
குழந்தைகளுக்குத் தர வேண்டிய பொறுப்பும், அன்னையுடை யதுதானே!
சற்று ஆழமாகப் பார்க்கும்போது, இந்தப் பாடல் இன்னும் அழகாகத் தெரிகிறது.
பஞ்ச பூதங்களாக அந்த அன்னையே இருக்கிறாள் என்று தொடங்குகிறது இந்தப் பாடல்.
நாம் பார்க்கும் இடமெல்லாம், அனுபவிக்கும் இடமெல்லாம், இந்த ஐந்து பூதங்கள்தானே நிறைந்து இருக்கின்றன!
இவை ஐந்து இல்லாமல், நமது வாழ்வே இல்லை.
நமது ஐந்து உணர்வுகளாகவும் அவளே இருக்கிறாள். இந்த ஐந்து உணர்வுகளால்தான் நாம் அந்த பஞ்ச பூதங்களையும் உணர்கிறோம்.
இப்படி,
நமது உடலின் உள்ளே இருக்கும் அந்த பஞ்சேந்திரியங்களாகவும், உலகையே நடத்திச் செல்லும் பஞ்ச பூதங்களாகவும் அவளே இருக்கிறாள்.
இப்படி,
நமக்கு உள்ளேயும், வெளியேயும் அவளே இருந்துவிட்டால், வேறு எந்த பொருளாவது நமக்கு வேண்டுமா என்ன?
நாம்
காண்பவையும்,
உணர்பவையும்,
கேட்பவையும்,
நுகர்பவையும்,
உண்பவையும், யாவும் அவளாகவே ஆகிவிட்டால்,
வேறு எந்த அனுபவமாவது நமக்கு வேண்டுமா என்ன?
இதுதானே மிகச் சிறந்த செல்வம்! யோகியர் யாவரும் விரும்பும் செல்வமும் இதுதானே!
இதற்குமேல் எந்த ஒரு அனுபவம் வேண்டாம் என்று எல்லோரும் எதை விரும்புகிறார்களோ,
அந்த அனுபவம், அந்த செல்வம், இதுவே அன்றோ!
இப்படி, அந்த அபிராமி பட்டர் பெற்ற அனுபவம், நமக்கும் கிடைக்க,
அந்த அன்னை அருள் செய்யட்டும்.

Comments
Post a Comment