#அபிராமிஅந்தாதிபாடல்-66

 #அபிராமிஅந்தாதிபாடல்-66


வல்லபம் ஒன்று அறியேன்; சிறியேன்; 


நின் மலரடிச் 


செம்பல்லவம் 


அல்லது 


பற்று ஒன்றிலேன்; 


பசும் பொற் பொருப்பு-


வில்லவர் தம்முடன் 


வீற்றிருப்பாய்! 


வினையேன் தொடுத்த


சொல் அவமாயினும், 


நின் திரு நாமங்கள் 


தோத்திரமே                    


பொருள்:-


அபிராமியே! 


பசுமையான பொன்மலையை வில்லாக உடைய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்தவளே! 


நான் அறிவே இன்னதென்று அறியாதவன்

 

மிகவும் சிறியவன். 


நின் மலர்ப்பாதத் துணையன்றி வேறொரு பற்றுமில்லாதவன்.


 ஆகையால் பாவியாகிய நான் உன்னைப் பாடிய பாடலில் சொற் குற்றங்கள் இருப்பினும், 


தாயே! 


நீ தள்ளி விடுதல் ஆகாது. 


ஏனெனில், அது உன்னைப் பாடிய தோத்திரங்களேயாகும்.


அபிராமி பட்டருக்கு, 


இங்கே மிகப் பெரும் சந்தேகம் எழுகிறது. 


அந்த அபிராமி பற்றிப் பாடுகிறோமே, சிந்திக்கிறோமே, 


அதற்கெல்லாம் நமக்கு அருகதை உண்டா? 


நமது சொற்களை அந்த அன்னை ஏற்றுக்கொள்வாளா? 


என்ற சந்தேகம்தான் அது.


அந்த சந்தேகத்தினையே, 


இந்தப் பாடலில் சொல்கிறார் பட்டர்:


அம்மா!


நீயோ உமையவள். 


அந்த சிவ பெருமானின் இடப்பக்கம் வீற்றிருப்பவள். 


பொன்னாலான மேரு மலையையே தனது வில்லாகக் கொண்ட அந்த சிவபெருமானின் துணைவி நீ!


நானோ, ஏதும் அறியாதவன். 


மிகச் சிறியவன்! 


உனது திருவடித் தாமரைகள் அன்றி வேறு ஏதிலுமே பற்று இல்லாதவன்.


நீ எங்கே? நான் எங்கே?


இருந்தாலும், நான், 


உன் மேலுள்ள பற்றின் காரணமாக, 


உன்னைத் தோத்திரம் செய்யப் புகுந்தேன்.


ஏதும் அறியாதவனின் சொல் மட்டும் எத்தனை சிறப்பாக இருந்து விட முடியும்? 


அந்தச் சொற்களும் கூட, உளறலாகத்தான் இருக்கும். எனினும், அவை, உன்னைத் தோத்திரம் செய்வதற்காகச் சொல்லப்பட்டவை. 


உன்னைத் தோத்திரம் செய்யும் எண்ணத்துடன் வெளிவந்தவை என்ற சிறப்பு மட்டும் அச்சொற்களுக்கு உண்டு. உன் நாமங்களைச் சொல்ல வந்தவை என்ற சிறப்பு அச்சொற்களுக்கு உண்டு.


தயவு செய்து அச்சொற்களை, 


அவைஅவச்சொற்களாயிருந்தாலும்கூட, 


நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் " என்று சொல்லி முடிக்கிறார்.


பக்தர்களுக்கு, சமயத்தில் சில சந்தேகங்கள் வந்துவிடும். 


இந்த உலகனைத்தையும், படைத்தும், காத்தும், அழித்தும் விளையாடும் அந்தப் பரம்பொருள் எங்கே? 


அந்த ஈரேழு பதினாங்கு புவனங்களுக்குள் ஒன்றான இந்த பூமியில், 


ஏதோ ஒரு மூலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எங்கே? 


அந்தப் பரம்பொருள் பற்றிச் சொல்லக்கூட நமக்கு அருகதை உண்டா?


நாம் சொன்னால் அந்தப் பரம்பொருளுக்கு அது உகந்ததாக இருக்குமா? 


நம்மால் சொல்ல முடியுமா? 


அப்படிச் சொன்னாலும் அது சரியாக இருக்குமா? 


இப்படி நிறைய கேள்விகள் அந்த அடியார் மனத்திலே தோன்றிவிடும்.


இவை அனைத்துமே சரியான கேள்விகள்தான்.


நல்ல சந்தேகங்கள்தாம். அந்தப் பரம்பொருளைப் பற்றிப் பாடுவதற்கும்,


பேசுவதற்கும்கூட ஒரு அருகதை வேண்டும்தான். 


ஆனாலும், அந்தத் தெய்வத்தை பற்றிப் பாட வேண்டும், அந்த அபிராமியைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணம் உருவாவதே, 


அந்த அன்னையின் அருளினால்தான்!! 


"அவன் அருளாலே, அவன் தாள் வணங்கி" என்கிறார், மாணிக்கவாசகர், திருவாசகத்திலே.


 எனவே, அந்தத் தெய்வத்தைப் பணிய வேண்டும், அவளை பற்றிப் பாட வேண்டும் என்ற எண்ணம் உருவானாலே, அவளது அருள் நமக்கு இருக்கிறது என்ற சிந்தனையும் நம்மிடம் வர வேண்டும்.


அத்துடன் மட்டுமில்லாது, அவளைப் பற்றிப் பேசும் அத்தனைச் சொற்களும், 


நல்ல சொற்கள்தாம்! அவளது நாமங்கள் ஏதும் பயனின்றிப் போய்விடுமா என்ன? இல்லையே! அதனால், பக்தர்கள் மனதிலே,


 பரம்பொருள் பற்றிப் பேசவும், பாடவும் நமக்கு அருகதை உண்டா என்ற எண்ணம் தோன்றினாலும் கூட, சிந்திப்ப்பதோ, பேசுவதோ, பாடுவதோ - 


இவை அனைத்தும் நிகழ்வது, அவளின் அருளினாலே என்ற அறிவு வந்து விட்டால், கேள்விகள் அனைத்தும் மறைந்து விடும். 


அந்த அன்னையைப் பற்றிய சிந்தனை ஒன்று மட்டுமே நினைவில் நிற்கும்


Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்