#அபிராமிஅந்தாதிபாடல்58
#அபிராமிஅந்தாதிபாடல்58
அருணாம்புயத்தும்
என் சித்தாம்புயத்தும்
அமர்ந்திருக்கும்
தருணாம்
புயமுலைத்தையல்
நல்லாள் தகை சேர்
நயனக் கருணாம்புயமும்
வதனாம்புயமும்
கராம்புயமும்
சரணாம்புயமும்
அல்லால்
கண்டிலேன்
ஒரு தஞ்சமுமே
அம்பாளை ஒரு தாமரை மலராக வர்ணிக்கிறார்.
அன்னை அபிராமியைத் தாமரை மலரிலேயே வைத்துப் பின்னர்,
தாமரை மலராகவே பார்த்து,
அழகு பார்க்கிறார், பட்டர்.
அன்னை செந்தாமரை மலரிலே வீற்றிருக்கிறாள்.
அந்த செந்தாமரை மலர்,
சூரியனை ஒத்து இருக்கிறது.
அதைப் பார்க்கும்போது,
சூரியனே ஒரு செந்தாமரை மலராக வந்தது போல இருக்கிறது.
அந்த அருணனால்,
சூரியனால் செயப்பட்ட தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் அந்த அன்னை,
எனது மனத் தாமரையிலும் அமர்ந்து இருக்கிறாள்.
அந்த அன்னையின் இரு ஸ்தனங்களும் கூட,
குவிந்த இரு தாமரை மலர்கள் போலக் காட்சி தருகின்றன.
அந்த மாதர்களில் சிறந்த பெண்மணியான என் அன்னையின் கண்களும் கருணை பொழிந்து கொண்டு,அழகிய இரு தாமரை மலரக்ளையே ஒத்து இருக்கின்றன.
அவளது முகமும்,
அரவிந்த மலரினைப் போல, அழகிய தாமரை மலரைப் போலவே காட்சி அளிக்கின்றது.
அவளது அபயம் நல்கும் கரங்களும், தாமரை மலர்கள் போலவே தோன்றுகின்றன.
சரணம் என வரும் அடியார்களுக்கு அபயம் நல்கிடும் அவளது பாதங்களும்,
அழகிய இரு தாமரை மலர்கள் போலவே காட்சி அளிக்கின்றன.
இப்படி, தாமரை மலர்களாலான திருமேனியாகவே காட்சி அளிக்கும் எனது இந்த அபிராமி அன்னையை அல்லால்,
வேறு ஒரு தஞ்சமும் இந்த உலகிலே காணேனே!
என்று சொல்லுகிறார் பட்டர்.
தாமரை மலர் மீது வீற்றிருக்கும் அன்னையைப் பாட ஆரம்பித்தவர்,
அன்னையையே,
ஒரு தாமரைப் புஷ்ப்பத்தினாலான வளாகக் காணுகிறார் இங்கே.
அவளது அமுது பொழியும் ஸ்தனங்களும்,
கருணை பொழியும் கண்களும்,
வரமளித்துக் காக்கும் கைகளும்,
அபயம் நல்கிடும் சரணங்களும் என, அவள் பட்டரின் மனக் கண்களுக்கு, முழுக்க முழுக்க ஒரு தாமரைக் குவியலாகவே காட்சியளிக்கிறாள் .
அருணாம்புயத்தும் -
அருணனாம் பகலவனைக் கண்டு வைகறையில் மலரும் தாமரையிடத்தும்
என் சித்தாம்புயத்தும் -
என் மனமெனும் தாமரையிடத்தும்
அமர்ந்திருக்கும் தருண அம்புய முலைத் தையல் நல்லாள் -
அமர்ந்திருக்கும் இளமையான, தாமரை போன்ற முலைகளையுடைய பெண்களில் சிறந்த அன்னையின்
தகை சேர் நயனக் கருண அம்புயமும் -
பெருமையுடைய திருக்கண்கள் என்னும் கருணைத் தாமரைகளும்
வதன அம்புயமும் - திருமுகம் என்னும் தாமரையும்
கர அம்புயமும் - திருக்கரங்கள் என்னும் தாமரைகளும்
சரண அம்புயமும் - திருவடிகள் என்னும் தாமரைகளும்
அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே - அன்றி வேறு எந்த கதியையும் அறியேன்
***
அன்னையின் திருவுருவம் தாமரைப் பொய்கையை ஒத்து இருக்கிறது போலும். அம்புயம் என்பது அம்புஜம் என்னும் வடசொல்லின் திரிபு என்பர். அம்பு - நீர்; ஜ: - பிறந்தது; நீரில் பிறந்தது என்று பொருள்.
***
அந்தாதித் தொடை:
சென்ற பாடல் அருளே என்று நிறைய
இந்தப் பாடல் அருணாம்புயம் என்று தொடங்கியது.
இந்தப் பாடல் தஞ்சமுமே என்று முடிய அடுத்தப் பாடல் தஞ்சம் பிறிது இல்லை என்று தொடங்கும்.
இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.

Comments
Post a Comment