#அபிராமிஅந்தாதிபாடல்55
#அபிராமிஅந்தாதிபாடல்55
மின்னாயிரம் ஒரு மெய் வடிவு
ஆகி விளங்குகின்றது
அன்னாள் அகம் மகிழ்
ஆனந்தவல்லி
அருமறைக்கு
முன்னாய் நடு
எங்குமாய் முடிவாய
முதல்வி தன்னை
உன்னாது ஒழியினும்
உன்னினும் வேண்டுவது
ஒன்றில்லையே
அபிராமி தாயே!
நீ ஆயிரம் மின்னல்கள் சேர்ந்தாற் போன்ற வடிவுடையவள்!
தன்னுடைய அடியவர்களுக்கு அகமகிழ்ச்சி தரக்கூடிய ஆனந்த வல்லி!
அருமையான வேதத்திற்கு தொடக்கமாகவும் நடுவாகவும், முடிவாகவும் விளங்கும் முதற் பொருளானவள்!
உன்னை மானிடர் நினையாது விட்டாலும்,
நினைத்திருந்தாலும், அதனால் உனக்கு ஆகக்கூடிய பொருள் ஒன்றும் இல்லையே!
மின்னாயிரம் ஒரு மெய் வடிவு ஆகி விளங்குகின்றது அன்னாள் -
ஆயிரம் மின்னல்கள் ஒரே நேரத்தில் உண்மை வடிவாகி விளங்குவதைப் போல் ஒளியுடையத் திருமேனி கொண்டவளை
அகம் மகிழ் ஆனந்தவல்லி -
என்றும் உள்ளத்தில் மகிழ்ச்சியே கொண்டிருக்கும் ஆனந்த வடிவானவளை
அருமறைக்கு முன்னாய் நடு எங்குமாய் முடிவாய முதல்வி தன்னை -
எல்லா வேதங்களுக்கும் தொடக்கமாகவும் நடுவாகவும் முடிவாகவும் மற்ற எந்த நிலையாகவும் நிற்கின்ற முதல்வியானவளை
உன்னாது ஒழியினும் உன்னினும் வேண்டுவது ஒன்றில்லையே -
உலக மக்கள் நினையாது விட்டாலும் நினைத்தாலும் அவளுக்கு ஆக வேண்டியது ஒன்றும் இல்லையே!
***
அந்தாதித் தொடை: சென்ற பாடல் சேர்மின்களே என்று முடிவுற இந்தப்பாடல் மின்னாயிரம் என்று தொடங்கியது.
இந்தப் பாடல் ஒன்றில்லையே என்று நிறைய அடுத்தப் பாடல் ஒன்றாய் அரும்பி என்று தொடங்கும்.
இப்படி ஒரு பாடலின் இறுதிச் சொல் அடுத்தப் பாடலின் முதல் சொல்லாக அமையத் தொடுத்துப் பாடுவது அந்தாதித் தொடை.
Comments
Post a Comment