#அபிராமிஅந்தாதிபாடல்54#
#அபிராமிஅந்தாதிபாடல்54#
இல்லாமை சொல்லி
ஒருவர் தம்பால்
சென்று இழிவுபட்டு
நில்லாமை நினைகுவிரேல்
நித்தம் நீடு தவம
கல்லாமை
கற்ற கயவர் தம்பால்
ஒரு காலத்தும்
செல்லாமை வைத்த
திரிபுரை
பாதங்கள் சேர்மின்களே
ஏ, வறிஞர்களே!
நீங்கள் வறுமையால் பாதிக்கப்பட்டு, ஒருவரிடத்திலே பொருளுக்காகச் சென்று,
அவர்கள் உங்களை இழிவு படுத்தாமல் இருக்க வேண்டுமா? என் பின்னே வாருங்கள்.
முப்புர நாயகியின் பாதங்களையே சேருங்கள்.
தவத்தையே செய்யாத பழக்கமுடைய கயவர்களிடத்திலிருந்து என்னைத் தடுத்தாட் கொண்டவள் அவளே!
இல்லாமை சொல்லி -
வறுமையைச் சொல்லிக் கொண்டு
ஒருவர் தம்பால் சென்று -
முன்பின் தெரியாத ஒருவரிடம் (தெரிந்திருந்தாலும் உதவி கேட்க வருவதால் தெரியாதவர் போல் நடந்து கொள்ளும் ஒருவரிடம்) சென்று உதவி கேட்டு
இழிவுபட்டு -
அவரால் அவமானப்படுத்தப்பட்டு
நில்லாமை நினைகுவிரேல் -
நிற்கும் நிலையை அடையாமல் இருக்க நினைப்பீர்களானால்
நித்தம் நீடு தவம் -
எப்போதும் பெருமை மிக்க தவத்தை
கல்லாமை கற்ற கயவர் தம்பால் -
செய்யாமல் இருப்பது எப்படி என்று நன்கு கற்ற கயவர்கள் தம்மிடம்
ஒரு காலத்தும் செல்லாமை வைத்த -
எந்தக் காலத்திலும் சென்று நிற்கும் நிலையை எனக்கு ஏற்படுத்தாத
திரிபுரை பாதங்கள் சேர்மின்களே -
மூன்று உலகங்களையும் உடையவளின் திருவடிகளைத் தொழுங்கள்.
***
முன்பின் தெரியாத அல்லது அப்படிக் காட்டிக் கொள்ளும் உறவினரோ அல்லாதவரோ அவர்களிடம் உதவி கேட்டு நிற்பது மிக்க அவமானம் அல்லவோ?
அதனால் யாரோ ஒருவரிடம் என்று பொருள் படும் படி 'ஒருவர் தம்பால்' என்கிறார்.
பொருட்செல்வமும் வேண்டும் அருட்செல்வமும் வேண்டும் என்பது பொய்யாமொழி வாக்கு.
அதனால் பொருள் வேண்டுவோரும் அன்னையைத் தொழவேண்டும்;
அருள் வேண்டுவோரும் அவளைத் தொழவேண்டும் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.
ஒரு காலமும் தப்பித் தவறிக் கூட இறைவனை வணங்கமாட்டேன் என்று இருப்பவரை 'கல்லாமை கற்றவர்' என்று நயம்பட சொல்கிறார்.
***
அந்தாதித் தொடை:
முந்தையப் பாடல் தவமில்லையே என்று நிறைந்தது.
இந்தப் பாடல் இல்லாமை சொல்லி என்று தொடங்குகிறது.
இந்தப் பாடல் சேர்மின்களே என்று நிறைய அடுத்தப் பாடல் மின்னாயிரம் என்று தொடங்குகிறது.
Comments
Post a Comment