பரஞானம் மற்றும் அபரஞானம்
பரஞானம் மற்றும் அபரஞானம்
அம்பாளின் ஸ்தனங்கள் என்பது,
உலக சம்பந்தமான அறிவைத் தரும் "அபர ஞானத்தையும்",
மெய்ப்பொருளை (பிரம்மத்தை) உணர்த்தும் "பர ஞானத்தையும்"
குறிக்கின்றன.
உலகைப் பற்றிய ஞானமான அபரஞானம் ஐம்பொறிகள் மூலமும், வேத, ஆகம, விஞ்ஞான அறிவு மூலமும் பெறப்படுகிறது.
பரஞானம் என்பது மெய்ப் பொருளையே நேரடியாக உணரும் ஞானமாகும்.
அபர ஞானம் (கீழ் ஞானம்)
உலக விஷயங்களைப் பற்றிய அறிவாகும்.
ஐம்பொறிகளின் மூலம் புற உலகை உணர்ந்து பெறப்படும் ஞானம்.
வேதங்கள், ஆகமங்கள், பௌதிக விஞ்ஞானம் போன்றவை இந்த ஞானத்தின் கீழ் வருபவை.
பர ஞானம் (மேல் ஞானம்)
மெய்ப்பொருளை (பிரம்மத்தை) நேரடியாக உணர்ந்து கொள்ளும் ஞானமாகும்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்ற மார்க்கங்களில் தன்னைத்தானே உணர்ந்து அடையும் உயர்நிலை ஞானம்.
அம்பாள் ஸ்தனங்கள் ஏன் இவை இரண்டும்?
அபர ஞானம்:
அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து உலக விஷயங்கள் தோன்றுகின்றன என்ற வகையில், இவை அபர ஞானத்தைக் குறிக்கின்றன.
பர ஞானம்:
இவை மெய்ப்பொருளை உணர்த்தும் உயர்நிலைப் பெரும் கருணையைக் குறிக்கின்றன.
அம்பாளின் கருணை:
அபர ஞானத்திலிருந்து விடுபட்டு
பர ஞானத்தை அடைய அம்பிகையின் கருணை அவசியம்.
இந்த கருணையே அம்பாளின் ஸ்தனங்களிலிருந்து வெளிப் படுவதாகக் கருதப்படுகிறது.
பரஞானம், அபரஞானம் என
ஞானம் இருவகைப்படும்.
அபரம் என்றால் கீழானது.
பரம் என்றால் மேலானது.
பல ஜன்மங்களில் மனதைப் புறவுலகில் செலுத்திப் பெற்ற ஞானம் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறது.
மனதை ஐம்பொறிகளின் மூலம் உலகில் செலுத்தி உலகில் உள்ள பொருள்களின்மீது ஒருமுகப்படுத்தும் போது அப்பொருளைப் பற்றிய இரகசியம் எல்லாம் நமக்கு விளங்குகிறது.
பௌதிக விஞ்ஞான அறிவு இவ்வாறுதான் நமக்கு வந்துள்ளது. எதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறோமோ
அதைப் பற்றிய அறிவு நமக்கு ஏற்படும்.
“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்பது இவ்வுண்மையை விளக்கும்.
உலக சம்பந்தமான யாவும் கீழானவை ஆகின்றன.
அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பெறுகின்ற ஞானமும் கீழானது ஆகின்றது.
எனவே அதை #அபரஞானம் என்று பகர்கின்றோம்.
உலகசம்பந்தமான பதிவுகளையெல்லாம் உள்ளத்திலிருந்து அகற்றவேண்டும்.
அப்போதுதான் மனதிலுள்ள உலகவாசனை அகலும்.
“சித்தமலம் அறுவித்து” எனத் திருவாசகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.
சித்தமலம் என்பது சித்தத்திலுள்ள உலகவாசனையாகும்.
சித்தத்திலுள்ள உலகவாசனை நீங்க நீங்க ஆத்ம சொரூபத்தைப் பற்றிய உணர்வு உண்டாகிறது.
அந்த உணர்வுக்குத்தான் #பரஞானம் என்று பெயர்.
உலக விஷயங்கள் அடங்கியுள்ள நூல்களைக் கற்கும்போது உலகவாசனை உள்ளத்திலிருந்து ஒருபோதும் போகாது.
எனவே உலகச் சிந்தனையை உணர்த்தும் நூல்களைக் கற்று உலகப் பொருள்களில் பற்றுதலை மிகுதிப் படுத்துகின்ற கல்விமான்களை விட உலகப்பற்றை ஒழிக்கும் வைராக்கிய புருஷர்கள் உத்தமர்களாகிறார்கள்.
இதனைத் தாயுமானவர்,
“கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள்” என்று பகர்கின்றார்.
உலகப்பற்றை வளர்த்துக் கொண்டிருக்கும் கல்விமான்கள் ஒருக்காலும் பரஞானத்தைப் பெற முடியாது.
உலகப்பற்றை ஒழிக்கும் ஒழுக்கம் நிறைந்த உத்தமர்களே பரஞானத்தைப் பெறமுடியும். பரஞானம் மெய்ப்பொருளைப் பற்றிய உணர்வு ஆகும். இதனை வள்ளுவர்,
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்று கூறியுள்ளார்.
பரஞானம் ஏற்படுகின்ற அளவு அதைப்பற்றிய சிந்தனையும் துன்பமும் அடியோடு அகலுகின்றன.
உலகஞானம் அல்லது அபரஞானம் உலக இன்ப துன்பத்தை வளர்த்துக் கொண்டேயிருக்கும்.
மெய்ப்பொருளைப் பற்றிய பரஞானம் உண்டாகும்போது உலக இன்பமும் துன்பமும் நமக்கு இல்லை. “ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்” என்னும் கோட்பாடு இதனை விளக்குகிறது.
பரஞானம் நமது பாரதத்திற்குரிய சொத்தாகும்.
நம் பாரதத்திலிருந்துதான் பரஞானம் மற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறது.
சுவாமி விவேகானந்தர் பரஞானத்தைத்தான் மேநாட்டினருக்கு எடுத்து வழங்கினார்.
பரஞானம் ஒற்றுமையை வளர்க்கிறது. உலக உயிர்கள் யாவும் ஒன்றின் தோற்றமே என்பதைப் பரஞானத்தின் மூலம்தான் அறியமுடியும்.
உலகியல் ஞானம் வேற்றுமையை வளர்த்துக்கொண்டே போகும். பரஞானத்தை ஒதுக்கிவிட்டு அபரஞானம் என்னும் உலகியல் அறிவை வளர்ப்பவர் உள்ளத்தில் புதைந்துள்ள சிறுமைகள் யாவும் தலையெடுக்கின்றன. அதன்மூலம் காமமும் குரோதமும் பொறாமையும் வளர்ந்து மனித சமுதாயம் அல்லல்படுகிறது.
பரஞானத்தை உண்டாக்கும் ஒழுக்கம் நிறைந்த உயர்கல்வியே நமக்கு வேண்டப்படுவது ஆகின்றது.

Comments
Post a Comment