#அபிராமிஅந்தாதிபாடல்45#

 #அபிராமிஅந்தாதிபாடல்45#



பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே.


தொண்டு செய்யாது 


நின் பாதம் தொழாது 


துணிந்து இச்சையே


பண்டு செய்தார் 


உளரோ இலரோ 


அப்பரிசு அடியேன்


கண்டு செய்தால் 


அது கைதவமோ 


அன்றிச் செய்தவமோ


மிண்டு செய்தாலும் 


பொறுக்கை நன்றே 


பின் வெறுக்கை அன்றே


தொண்டு செய்யாது - 


உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல்


பொருள்:-


அன்னை அபிராமியே, 


உனக்கு தொண்டு செய்யாமலும்,


உன் பாதம் தொழாமலும் இருந்துக்கொண்டு, 


தன் விருப்பப்படியே கடமைகளை மட்டுமே செய்து வாழ்ந்த ஞானிகள் இருந்தனர். 


அவ்வாறு நானும் இருந்தால் அது உனக்கு மகிழ்ச்சி அளிக்குமா இல்லையா என்பது தெரியவில்லை.


எனினும் என்னை வெறுக்காது பொறுத்தருள வேண்டும்.


இங்கு பூர்வ மீமாம்சர்களை குறிக்கிறார். 


கர்மமே பிரம்மம் என்ற நம்பிக்கையினை உடையவர்கள் பூர்வ மீமாம்சர்கள். 


குமரில பட்டர், மண்டன மிஸ்ரர் போன்றோர். 


பிறகு, ஆதி சங்கரரால் வாதத்தில் வெல்லப்பட்டு கர்மம், பக்தி, ஞானம் இம்மூன்றுமே அவசியம். கர்மம் மட்டும் போதாது என்று அத்வைத சித்தாந்தத்தினை ஒப்புக் கொண்டனர். 


கர்மத்தை செய்து, நம் உடலையும் மனத்தினையும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். 


பின் இறைவனிடம் பக்தி செலுத்தி  ஞானத்தினை பெற வேண்டும். ஞானத்தினை அடைந்தால்,


 பிரம்மமும் நாமும் ஒன்று.


அதன்பின் த்வைதமே (இருமை) இருக்காது. 


அஹம் ப்ரஹ்ம்மாஸ்மி என்ற மஹா வாக்யமே 


அத்வைத சாரம்.


ப்ரஞானம் பர பிரம்ம


 (ஞானமே பிரம்மம் - ஐதரேய உபநிடதம், ரிக் வேதம்)


தத் த்வம் அஸி 


(அதுவே நீ - மாண்டூக்ய உபநிடதம் - அதர்வ வேதம்)


அயம் ஆத்மா பர பிரம்மம்


 (இந்த ஆத்மாவே பிரம்மம் - சாந்தோக்ய உபநிடதம் - வேதம்)


அஹம் ப்ரஹ்ம்மாஸ்மி 


(பிரம்மமே நான், நானே பிரம்மம் - ப்ரஹதாரன்யக உபநிடதம் - யஜுர் வேதம்)


இவையே உபநிடதங்கள் கூறும் மஹா வாக்யங்கள்.


பொழிப்புரை:-


நின் பாதம் தொழாது - 


உன் திருவடிகளை வணங்காமல் (உன் திருவடிகளான அடியார்களை வணங்காமல்)


துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ - 


துணிவுடன் தங்கள் மனம் விரும்பியதையே பழங்காலத்தில் செய்தவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ


 (அவர்கள் உன் அருளைப் பெற்று என்றும் நிலையான வாழ்வை அடைந்தார்களோ இல்லையோ)


அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ - 


அவர்கள் செய்ததை அடியேன் கண்டு அதனைப் போல் செய்தால் அது நல்லதோ கெட்டதோ


மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே -


அப்படியே நான் உன் மனம் விரும்பாததைச் செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள வேண்டும்.


***


பக்தி வழியில் நிற்காமல் ஞானவழியிலும் கர்மவழியிலும் நின்று கடமைகளைச் செய்த முன்னோர்கள் பலர் உண்டு;


 அவர்களை 'தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ' என்கிறார். 


இங்கே இச்சை என்றது அவளது இச்சைவழி வந்த கடமைகளை. கடமை புரிவார் இன்புறுவார்;


 அவற்றை மட்டுமே தவறாமல் செய்தால் போதும்; 


இறைவியை வணங்கத் தேவையில்லை - 


என்று அந்த கர்ம மீமாம்சை வழி நின்றவர்கள் முன்னொரு காலத்தில் இருந்தார்கள். அவர்கள் உன் அருள் பெற்று நிலையான வாழ்வு அடைந்தார்களோ இல்லையோ.


அதனை நான் அறியேன் என்கிறார்.


உன் அடியவன் ஆன நான் அவர்களைக் கண்டு உன்னை விட என் கடமைகளே பெரியது என்று எண்ணிச் செயல்பட்டால் அது நல்லதோ கெட்டதோ; 


அதனைத் தவமாகக் கொள்வாயோ குற்றமாகக் கொள்வாயோ; 


அதனை அறியேன். 


ஆனால் எப்போதாவது அப்படி நான் செய்தால் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்; குற்றம் செய்தேன் என்று என்னைத் தள்ளிவிடாதே என்கிறார்.


***


அந்தாதித் தொடை: 


தொண்டு செய்தே என்று சென்ற பாடல் நிறைவுற்றது. 

இந்தப் பாடல் தொண்டு செய்யாது என்று தொடங்கிற்று. 


வெறுக்கை அன்றே என்று நிறைந்தது இந்தப் பாடல். அடுத்தப் பாடல் வெறுக்கும் தகைமைகள் என்று தொடங்கும்.


எதுகை: 


தொண்டு செய்யாது, 

பண்டு செய்தார், 

கண்டு செய்தால், 

மிண்டு செய்தாலும் என்று இரண்டிரண்டு எதுகைகள் அமைந்திருக்கின்றன.


மோனை: தொண்டு - செய்யாது - தொழாது - துணிந்து, பண்டு - பரிசு, கண்டு - கைதவம், மிண்டு - பொறுக்கை - பின் (பகரமும் மகரமும் மோனைகளாக அமையும்)


உளரோ இலரோ, கைதவமோ செய்தவமோ, நன்றே அன்றே - இந்த இடங்களில் முரண் தொடை அமைந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.