அபிராமிஅந்தாதிபாடல்43#
#அபிராமிஅந்தாதிபாடல்43#
அன்னையின் அழகினை ரொம்ப அருமையா வர்ணனை பண்ணியிருக்கார் பட்டர்.
பரிபுரச்
சீறடிப் பாசாங்குசை
பஞ்சபாணி
இன்சொல்
திரிபுரசுந்தரி
சிந்துர மேனியள்
தீமை நெஞ்சில்
புரிபுர வஞ்சரை
அஞ்சக் குனி
பொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி
இறைவர்
செம்பாகத்து இருந்தவளே
அருஞ்சொற்பொருள்.
முந்திய பாடல் 42 ல் கூறியது போல,
சிலம்பணிந்த சிவந்த திருவடிகளை உடையவளும்,
கரங்களில் பாசம் மற்றும் அங்குசம் உடையவளும்,
இனிய சொற்களை உரைப்பவளும்,
சிவந்த மேனியினை உடையவளும்,
தீய எண்ணம் கொண்ட வஞ்சனை நிறைந்த அரக்கன் புரனையும்,
அவன் இருப்பிடமான திரிபுரத்தினையும் அழித்தவரான சிவபெருமானின் இட பாகத்தில் இருப்பவளும்
அன்னை அபிராமியே!
பரிபுரம்: சிலம்ப
சீறடி: சிறிய அடி
பொருப்பு: மலை (இங்கே மேரு மலை)
சிலை: வில்
குனித்தல்: வளைத்தல்
எரி: நெருப்பு
பரிபுரச் சீறடி -
சிலம்பினை அணிந்த அழகிய சிறிய திருவடிகளை உடையவளே;
நம்மை எல்லாம் பரிபாலனம் செய்யும் திருவடி அம்மையின் திருவடி.
அவையும் சின்னஞ்சிறியவை. இதைத்தான், 'பரிபுரச் சீறடி' என்று குறித்தார் பட்டர்.
உலகத்தைப் படைத்த அன்னையின் வடிவு மிகப்பெரிது..
ஆயினும் நம் போன்ற சிறியோர்களும் காணும் வண்ணம் அவள் அழகிய சிறு குழந்தை வடிவில் காட்சி தருகிறாள்..
அன்னையை சிறு குழந்தை வடிவில் மனத்தில் எண்ணிப் பாருங்கள்!!
நம் அன்னையின் திருவடிகள் சிறியன:
அத் திருவடிகளில் அவள், வேதமாகிய சிலம்புகளை அணிந்துள்ளாள்.
அவள் மெல்ல நடக்கையில், அவளது திருவடியின் சிலம்புகள் வேத நாதமாய் ஒலிக்கின்றன.
பரிபுரச் சீறடி கொண்டவள் அவள்.
பரிபுரம் என்றால் சிலம்பு.
முந்தைய பாடலின் முடிவில் பரி+புரை என்று பிரித்துப் பொருள் கொண்ட சொல்,
இங்கே பரிபுரம் என்ற தனிச்சொல்லாகச் சிலம்பு என்ற பொருளில் வருகிறது.
காலில் சிலம்பணிந்தவள் என்று சக்தியை இறையிலக்கியங்களில் நிறைய வர்ணித்திருக்கிறார்கள்.
லலிதாசஹஸ்ர நாமத்தில் 'நவரத்தின மணியினாலான சலங்கை' என்று சொல்லப்பட்டிருக்கிறது.
சௌந்தர்யலஹரியில், சக்தியின் சலங்கையொலியைப் பற்றிச் சுவையாகச் சொல்லியிருக்கிறார் சங்கரர்.
'ஊடலில் தோற்றுச் சரணடைந்த சிவனின் தலையில் சக்தி தன் கால் விரல்களை விளையாட்டாக வைத்துத் தட்டும் பொழுது ஏற்படும் கிணுகிணுப்பான வெற்றி ஓசையில் எல்லாம் அடங்கி விடும்' என்ற அழகான சங்கரர் கற்பனையை,
வீரைக் கவிராஜர் 'இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரல் எனது அறைச் சிலம்பு எழும் அரவம் என்பதேன் அருண மங்கலக் கமலையே' என்று அருமையான தமிழில் சொல்லியிருக்கிறார்.
சிவனிடம்,
"ஐயா நீர் மலையை வளைத்து அம்பெய்தி முப்புர அரக்கரைக் கொல்லும் வலிமை படைத்தவர் என்பதெல்லாம் சரி,
ஆனால் எம் தலைவியின் கால் சலங்கையொலி உம்மையும் அடக்கி விடுமே?" என்பது போல் தொனிக்கும் பட்டரின் உட்பொருள் இன்னும் சுவை.
"பாசாங்குசை (பாசம் அங்குசம் )
பாசத்தினால் தான் பிள்ளைகளை இணைத்துத் தன்னிடம் ஈர்த்து வைத்திருக்கிறாள்.
அத்துடன் தன் உள்ளத்து பாசத்தையும் கைவழி காட்டுகின்றாள்.
அங்குசம் ஆணவத்தை அடக்கும் கருவி.
பாசம் கொண்ட தாய். தனது பிள்ளைகளின் ஆணவத்தினையும் அடக்க வல்லவள்;
ஆவணத்தினை அடக்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு
உடையள் அவள்.
அன்னை அபிராமி
பாசம் ( அல்லது ஆசை) என்னும் கயிற்றை தனது இடது பின்கையில் தாங்கியிருப்பது பாசத்தைக் காட்டும் பண்பு உடையவள் அன்னை என்று சொல்லுகிறது.
அங்குசம் என்பது யானையை அடக்க அதன் பாகன் பயன்படுத்தும் தொரட்டி.
யானை மிகவும் பலசாலியானது. அதற்கு மதம் பிடித்தால் அடக்கப் பயன்படும் ஆயுதம் தொரட்டி.
எல்லாவற்றிற்கும் மூலமாகிய மலம் ஆணவம்.
அதற்கு யானையை உவமையாகச் சொல்வது வழக்கம்.
அகங்காரம் என்னும் மதயானையை அடக்க நம்மால் இயலாது.
அது அவள் அருளினால் தான் முடியும்.
இந்த மதயானையை அடக்கும் பாசாங்குசத்தை அவள் ஏந்தியிருப்பது இதற்கு அடையாளம்.
மேலும் காமத்தில் வசப்படுத்தும் மாயா சொரூபியும்,
அதனின்று நீக்கும் ஞான சொரூபியுமாக விளங்குகிறாள் #அன்னைஅபிராமி#
முதல் வேலை மன்மதனுக்கு. இரண்டாவது வேலை ஞானக் கொழுந்தனாகிய கணபதியின் மூலம் நடக்கிறது.
இதனாலே தான் கணபதியின் கையில் பாசாங்குசம் காணப்படுகிறது.
அகங்காரம் அழிய. அன்னையை பாசாங்குசம் ஏந்தியவளாகத் தியானிக்க வேண்டும்.
அன்னை அபிராமியின் உருவத் தியானத்தினால்
ஆணவம், மாயை,கண்மம் என்ற மும்மலமும் அழிந்து,
அன்னையின் அன்பு என்னும் அருளினால் இன்பம் உண்டாகும் என்பதை அபிராமிபட்டர் இந்தப் பாடல் மூலம் சொல்கிறார்.
அன்னையைச் சொல்கின்ற போது, அவளது கைகளில் பஞ்சபாணம், பாசாங்குசம் என்றார்.ஏன்?
கருப்புச்சிலை என்று அபிராமிபட்டர் சொல்லவில்லை.
அந்தச்சிலை என்ற வில் எங்கே போயிற்று ?
வில்லைச் சொல்லாமல் விட்டாரே என்று நாம் பேதுறுகிறோம். ' சொன்னேன் ' என்கிறார் அவர்.
அந்தக் கரும்புவில், எரிபுரை மேனி இறைவரிடம் பொருப்பு வில்லாயிற்று.
எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். “தரணியில் அரணிய” என்ற பாடலில் “எரிபுரை வடிவினள்” என்று அம்மையை விளிக்கிறார்.
இது விந்தை! இன்னும் ஒரு விந்தையையும் இந் பாடலில் காண்போம். அம்பாளின் மூன்று கைகளைப் பக்தர் விவரித்தார்.
ஒரு கையில் அங்குசம் ;
இன்னொரு கையில் பாசம் ;
மூன்றாவது கையில் பஞ்சபாணங்கள் என்றார்.
நான்காவது கையினைச் சொல்லாமல் விட்டுவிட்டார்.
நான்காவது கையினை, அவளது வலப்பாகம் கொண்ட சங்கரனாரின் கையில் உள்ள பொருப்புச் சிலையுடன் சேர்த்தார்.
அன்னைக்குள்ள மூன்று கைகளைச் சொல்லி,
எரிபுரை மேனியரின் நான்கு கைகளில் ஒரு கையை மட்டும் சொன்னதால்,
இறைவனின் செம்பாகத்தில் நம் அன்னை அரைப்பாகம் அல்ல, முக்கால் பாகம் பெற்றுவிட்டாள் என்று முழங்கத் தோன்றுகின்றது.
இன்சொல் திரிபுரசுந்தரி - இனிய சொற்களையுடைய மூவுலகங்களிலும் அழகில் சிறந்தவளே
சிந்துர மேனியள் - சிந்துரத்தை மேனியெங்கும் அணிந்தவளே
தீமை நெஞ்சில் புரி புர வஞ்சரை -
தீய நெஞ்சத்தைக் கொண்டிருந்த திரிபுர அசுரர்களை அவர்கள்
அஞ்சக் குனி _ அஞ்சும்படியாக
பொருப்புச் சிலைக் கை -
அஞ்சும்படியாக மேருமலையால் ஆன வில்லை வளைத்தக் கையினை உடைய
பொருப்பு என்றால் மலை. சிலை என்றால் வில்.
சிவன் மேருமலையை வில்லாக வளைத்ததாக திரிபுரம் எரித்த கதையில் வருகிறது.
எரிபுரை மேனி - எரியும் நெருப்பினை ஒத்த மேனியைக் கொண்ட
எரிபுரை என்ற சொல்லை அருணகிரியும் பயன்படுத்தியுள்ளார். "தரணியில் அரணிய" என்ற பாடலில் "எரிபுரை வடிவினள்" என்று அம்மையை விளிக்கிறார்.
இறைவர் செம்பாகத்து இருந்தவளே - நம் தலைவராம் சிவபெருமானின் சரிபாதியாக இருந்தவளே
வாம பாகம்,செம்பாகம் எதாயிருந்தால் என்ன அம்பாள் இருக்கும் இடம் செம்மையாக இருக்கும்.
எரிகின்ற நெருப்பில் செம்மை எது? ஒளி. நெருப்பிற்கு உரிய பண்புகள் வெப்பமும் ஒளிச்சுடரும்.
வெப்பத்திற்கு நிறமில்லை. ஆனால் ஒளிச்சுடருக்கு? அது செம்மைதானே? அப்படி வெளிச்சமும் வெப்பமும் சேர்ந்திருப்பதுதான் அம்மையப்பன். பிரிக்க முடியாதது..
ஆகவே நாமும் அன்னையை அந்த பஞ்சபாணியை, எரிபுரை மேனியரின் இடப்பாகத்தில் இருப்பவளை நம் மனக் கண்களாலும்,
அகக் கண்களாலும் தரிசனம் செஞ்சுண்டே, தியானிச்சின்டே இருப்போமா!!
Comments
Post a Comment