கங்கைகொண்ட சோழபுரம்
கங்கைகொண்ட சோழபுரத்திற்கு
கடன் தீர்த்த காஞ்சி சங்கர மடம்.
தெற்காசிய நாடுகளை ஆண்ட சோழ பேரரசர்களின் தலைநகராக இருந்த பெருமைக்குரியது கங்கைகொண்ட சோழபுரம்.
இங்கு மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன், சோழீசுவரர் கோவில் என்ற சிவலாயத்தை கட்டினார்.
மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவிலை மாதிரியாக கொண்டு,
கட்டப்பட்ட சோழீசுவரர் கோவில், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சோழ மன்னர்களின் கட்டிடக் கலைக்கு சான்றாக நிமிர்ந்து நிற்கிறது.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புகள் கொண்ட, கலையம்சம் மிக்க சோழீசுவரர் கோவில்,
இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 1983-ம் ஆண்டுக்கு முன்பாக பெரிய அளவில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. பூஜைகள், திருவிழாக்களும் பெரிய அளவில் நடக்கவில்லை.
1983ல் வாரணாசி சென்று திரும்பிய காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்கள், புனித கங்கை நீருடன், காஞ்சி மகாபெரியவரை சந்திக்க, காஞ்சிபுரம் வந்தனர்.
கங்கை நீரை மகாபெரியவரிடம் கொடுத்தபோது,
"எனக்கு கங்கை நீரை கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால், கங்கைகொண்ட சோழபுரத்தில், கங்கைபெயரைக் கொண்ட சிவபெருமான் கங்கை நீர் இல்லாமல் இருக்கிறார்.
அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும்" என கூறியுள்ளார். அப்போது தோன்றியதுடன் அன்னாபிஷேக கமிட்டி.
அப்போது கனரா வங்கியின் ஆடிட்டர் சந்திரசேகர், கனரா வங்கியின் உயர் அதிகாரி லட்சுமி நாராயணன் உள்ளிட்ட சங்கர மடத்தின் பக்தர்கள் இருந்துள்ளனர்.
அவர்களிடம், "கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரருக்கு வரும் ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும்" என கூறியிருக்கிறார்.
அன்னிய படையெடுப்புகள் நிகழ்ந்தபோது, காஞ்சிபுரத்தில் பாதுகாப்பாக இருக்க முடியாத சூழல் இருந்தது.
இதனால் காஞ்சி சங்கர மடத்தைச் சார்ந்தவர்கள் தஞ்சாவூர் சென்றுள்ளனர்.
செல்லும் வழியில் உடையார் பாளையம் ஜமீன் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் சில காலம் தங்கியுள்ளனர். அவர்களுக்கான தங்குமிடம், உணவு, தினசரி பூஜைக்கான ஏற்பாடுகளை, உடையார்பாளையம் ஜமீனை சேர்ந்தவர்கள் செய்துள்ளனர்.
அன்றைய காலகட்டத்தில் உடையார்பாளையம் ஜமீனும் பொருளாதார பலமற்றே இருந்துள்ளது.
ஆனாலும், காஞ்சி சங்கர மடத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்துள்ளனர். அப்போது கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவில், உடையார்பாளையம் ஜமீன் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.
இந்த கோவிலில் இருந்த வருமானத்தைக் கொண்டு காஞ்சி சங்கர மடத்திற்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர்.
இந்த வரலாற்றை கனரா வங்கியின் ஆடிட்டர் சந்திரசேகர், கனரா வங்கியின் உயர் அதிகாரி லட்சுமி நாராயணன் உள்ளிட்டோரிடம் விவரித்த காஞ்சி மகா பெரியவர்,
"கங்கைகொண்ட சோழபுரம் சோழீசுவரர் கோவிலுக்கு, காஞ்சி மடம் கடன்பட்டுள்ளது.
நான் சன்னியாசி என்பதால், அந்தக் கடனை தீர்க்க முடியாது. அதனால், நீங்கள் அந்தக் கடனை தீர்க்க தேவையானவற்றை செய்ய வேண்டும்" என கட்டளையிட்டுள்ளார்.
அதை இறை கட்டளையாக ஏற்ற அவர்கள்,
கங்கைகொண்ட சோழபுரம் வந்து அங்குள்ள, பொதுப்பணித்துறை பொறியாளராக பணியாற்றிய கோமகன் உள்ளிட்டோருடன் இணைந்து,
ஐப்பசி அன்னாபிஷேகம் செய்யத் துவங்கினர். அவர்களின் தொடர் முயற்சியால் தினசரி பூஜைகளும் சிறப்பாக நடக்கத் துவங்கின.
இந்திய தொல்லியல் துறை வாயிலாக கோவிலை சீரமைக்கும் பணிகளையும் மேற்கொண்டனர். 'கங்கைகொண்ட சோழபுரம் வளர்ச்சி கவுன்சில்' என்ற அமைப்பை உருவாக்கி பல்வேறு மேம்பாட்டு பணிகளையும் மேற்கொண்டனர்.
அன்னாபிஷேக கமிட்டி மூலம் கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று ஐப்பசி மாத அன்னாபிஷேகம் மிகப்பெரிய விழாவாக மாறியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அன்னாபிஷேகத்தின்போது வருகின்றனர்.
Comments
Post a Comment