எனக்கு முக்கியம் அம்பாள்” : கடைசி பகுதி
எனக்கு முக்கியம் அம்பாள்” : கடைசி பகுதி
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-4.
நாம் பெரிய பெரிய நல்ல காரியமாக ஏதோ செய்ய வேண்டும் என்பதே இல்லை.
முதலில் நாம் தப்புப் பண்ணாமல் இருக்க முயன்றாலே போதும்.
தப்புப் பண்ணுகிறபோதெல்லாம் அம்பாளிடம் பிரார்த்தித்துக்கொண்டு, அவள் கிருபையால் ஆத்ம சுத்தி செய்து கொண்டு,
படிப்படியாக நமக்கு நிறைவைப் பெற்று, நம் மதத்துக்கும் நிறைவை உண்டு பண்ணுவோம்.
நம் மதம் என்பது லோகம் முழுவதற்கும் பொதுவானதால், இதன் மூலம் சகல தேச ஜனங்களுக்கும் க்ஷேமத்தைத் செய்வோம்.
எல்லா மதங்களும் முடிவில் மோக்ஷம் அடைவதைத்தான் லக்ஷியமாகச் சொல்கின்றன.
பரம சத்தியத்தை அநுபவத்தினால் அறிகிற ஞானம்தான் அந்த மோக்ஷம்.
அந்தப் பரம ஸத்யத்தைத்தான் வேதாந்தத்தில் பிரம்மம் என்பது.
பிரம்மத்தின் சித்சக்தி என்கிற ஞான ஸ்வரூபமாக இருக்கிற அம்பாளை உபாஸித்தாலே, அவளுடைய அநுக்கிரகத்தால் நாமும் அந்த ஸத்தியம்தான் என்கிற ஞானத்தை அடைய முடியும்.
இகலோகத்தில் பலவிதமான சௌக்கியங்களை அநுக்கிரகம் செய்கிற அம்பாள், முடிந்த முடிவாக இந்த ஞானத்தை, மோக்ஷத்தை அருளுகிறாள்.
அவள் அநுக்கிரஹத்தால்தான் சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலையாகி மோக்ஷம் அடையலாம்.
அம்பாளை ஆராதிப்பதால், ஞானம் ஆவிர்பவமாகி, அஞ்ஞானம் விலக, மோக்ஷம் கிடைக்கிறது என்பது சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள் எல்லாவற்றிலுமே சொல்லப்பட்டு இருக்கிறது.
அம்பாளிடம் பக்தி பண்ணிப் பண்ணி இப்படிப் பரம ஞானிகளான பல மஹான்களையும் அறிந்து இருக்கிறோம்.
நாம் ஆரம்பிக்க வேண்டியது அம்பாளுடைய சரணாரவிந்த தியானம்தான்.
கொஞ்சம் கொஞ்சம் தியானம் செய்தாலே அதன் ருசி தெரியும் – அம்பாளுடைய சரண கமலத்தைக் காட்டிலும் சாந்தி அளிக்கக்கூடியது வேறு எதுவும் இல்லை என்று புரிய ஆரம்பிக்கும்.
விடாமல் இப்படித் தியானம் செய்தால் முடிவில் இந்த உடம்பு போன பின் செத்தும் சாகாதவராகலாம் – அமிருதமாகலாம்.
என்றும் நிலையாக இருக்கிற ஞானத்தில் இரண்டறக் கலந்து அமிருதமாகலாம்.
பிறத்தியாருக்கு உபதேசித்துத் திருத்துவதற்கு யத்தனம் செய்வதற்கு முன்னால், அவரவரும், தான் தப்புப்பண்ணாமல் இருந்தாலே போதும்.
இதற்கு அவளுடைய சரண கமலம்தான் கதி.
எளிதில் நம் குறையைப் போக்கிக் கொள்ள தியானம் என்கிற விசையை நமக்குள்ளேயே வைத்திருக்கிறாள். நீங்கள் எல்லோரும் உங்கள் ஆத்ம க்ஷேமத்திற்காகவும், லோக க்ஷேமத்திற்காகவும் அவளைத் தியானம் செய்ய வேண்டும்.
இதை எல்லோரும் விடாமல் செய்து கொண்டிருந்தாலே போதும்.
ஒருத்தருக்கும் ஒரு கஷ்டமும் வராது; சமஸ்தப் பிரபஞ்சமும் பரம க்ஷேமமாக இருந்து வரும்.
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#
Comments
Post a Comment