எனக்கு முக்கியம் அம்பாள்” :

 "எனக்கு முக்கியம் அம்பாள்” :



 தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)-1


வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. 


துணி அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. 


நம் மனம் அழுக்கு இல்லாமல் ஆகவேண்டும்.


இதற்கு சாக்ஷாத் பராசக்தியும், பரமேசுவர பத்தினியுமான அம்பாளுடைய சரணாரவிந்தத் தியானம்தான் வழி. 


அம்பாளின் சரணத்தைத் தியானித்துக் கொண்டே இருந்தால் அழுக்கெல்லாம் போய், 


குறை எல்லாம் தீர்ந்து பூரணமாக அப்படியே நிரம்பிப் போய்விடுவோம். அழுக்கும் குறையும் உள்ள ஜீவர்களாக நாம் உண்டாகியிருப்பது அவள் விளையாட்டுத்தான். 


எனவே இதிலிருந்து நம்மை மீட்டு நிர்மலமாக, பூரணமாகப் பண்ணுவதும் அவள் காரியம்தான்.


ஆடு மாடு மாதிரி சாகாமல், சாந்தியும் ஆனந்தமும் நிரம்பி நம் உயிர் உடம்பிலிருந்து பிரிந்து மறுபடியும் உடம்பு எடுக்காமல் இருப்பதற்காகத்தான் இத்தனை மதங்களும் உள்ளன. 


அம்பாளின் தியானத்தைவிட, வேறு மதம் வேண்டியதே இல்லை;


சாந்தியும், ஆனந்தமும் தந்து நம்மை பூரணத்துவம் அடையச் செய்வது அதுவே.


அம்பாளைத் தியானித்து தியானித்து நம்மில் யாராவது நிரம்பிப் போய்விட்டால் நம் மதம் தானே வளரும்.


 மதத்துக்காகப் பிரச்சாரம், வாதம் எதுவுமே வேண்டாம். 


நான் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? உபந்நியாசம் செய்கிற இந்த நேரத்தில் அம்பாளைத் தியானித்துக் கொண்டிருந்தால், 


அது இந்த உபந்நியாசத்தை விட மிகவும் ஆத்ம க்ஷேமமும் லோக க்ஷேமமும் ஆகும்.


இந்தப் பேச்சு வார்த்தைகளைவிட நிறைவுக்கு உதவுவது அதுவே. ஆனாலும் எனக்கு இந்த உண்மை இப்படிப் பேச உட்கார்ந்ததால் தெரிகிறது. 


ஆகவே, பேசப்பேச அதுவும் என் நினைவைச் சுத்தப்படுத்துகிறது என்று தெரிகிறது. நம்மில் ஒரு ஆத்மாவாவது பூரணமாக உயருவதற்காகத்தான் மத விஷயங்களைப் பேசுகிறேன்.


இந்த மத விஷயங்களுக்கெல்லாம் முடிவு நம் குறைகளைக் களைந்து நிறைவு பெறுவதுதான். 


அவரவரும் அநுஷ்டானங்களைச் செய்து தன் நிறைவை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நம் மதம். 


அதற்கான புத்தியும் சக்தியும் அம்பாளிடமே வேண்டிப் பெற வேண்டும்.

Comments

Popular posts from this blog

ஶ்ரீசக்ர தாடங்கங்கள்

காயத்ரி மந்திரத்தில் என்ன சிறப்பு சக்தி இருக்கிறது...?

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.