#அபிராமிஅந்தாதிபாடல்-27#
#அபிராமிஅந்தாதிபாடல்-27#
பலன்: மனநோய் அகலும்
உடைத்தனை வஞ்சப் பிறவியை,
உள்ளம் உருகும்
அன்புபடைத்தனை,
பத்ம பதயுகம்
சூடும் பணி
எனக்கே
அடைத்தனை,
நெஞ்சத்து அழுக்கை
எல்லாம் நின்
அருள் புனலால்
துடைத்தனை,
சுந்தரி
நின் அருள் ஏதென்று
சொல்லுவதே
பொருள்:
சுந்தரி - அழகி - அபிராமியே,
உன் அருள் பெருமையை என்னவென்று சொல்வது?
முதலில், வஞ்சகம், கோபம் போன்ற அழுக்குகள் நிறைந்த பிறவியை அறுத்தாய்.
பின்னர் அன்பே ததும்பும் உள்ளம் கொடுத்தாய்.
பின்னர் உன் பாத கமலங்களை வணங்கும் பணியினை எனக்கே அளித்தாய்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
என் நெஞ்சத்தின் அழுக்கை உன் அருள் வெள்ளத்தினால் துடைத்தாய்.
பேரழகியே, அடியேனது கன்மத்தால் வந்த பிறவியைத் தகர்த்தாய்;
என் உள்ளம் உருகும்படியான அன்பை அவ்வுள்ளத்திலே உண்டாக்கினை;
தாமரை போன்ற இரண்டு திருவடிகளைத் தலையால் வணங்கும் தொண்டை எனக்கென்றே ஒப்பித்தாய்;
அடியேனது நெஞ்சில் இருந்த ஆணவம் முதலிய அழுக்கை எல்லாம் நினது கருணையாகிய தூய நீரால் போக்கினை;
இங்ஙனம் செய்த நின் திருவருட் சிறப்பை அடியேன் என்னவென்று எடுத்துப் பாராட்டுவது!
ஆனந்தாதிசயத்தால் காரியத்தை முன் வைத்தும் காரணத்தைப் பின் வைத்தும் பேசுகிறார்.
பிறவி இனி இல்லை என்ற துணிபுபற்றி உடைத்தனை என்றார். அப்பிறவி தீர்வதற்குக் காரணம் உள்ளம் உருகும் அன்பு:
அவ்வன்பு உண்டாதற்குக் காரணம் நெஞ்சிலுள்ள அறியாமை முதலியன அவளருளாலே நீங்குதல்.
பலகாலும் படிந்த அழுக்கை மெல்ல மெல்ல நீரால் கழுவுதல் போலத் தன் திருவடித் தொண்டு புரிய வைத்தற்கு முன் மெல்ல மெல்ல நெஞ்சத்து அழுக்கைப் போக்கத் திருவருள் நீரைப் பெய்தாளென்றார்.
தாள் பணியவும் அருள் வேண்டுமென்பது.
“அவனருளாலே அவன்றாள் வணங்கி” என்னும்
திருவாசகத்தாற் பெறப்படும்.
பதயுகம்.
இரண்டு திருவடிகள்.
அடைத்தல்- இன்னதை இன்னார் செய்க வென வரையறுத்து ஒப்பித்தல்.
Comments
Post a Comment