அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? பகுதி 1
பரமச்சார்யாளின் தெய்வத்தின் குரல்
அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்?
:
தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)பகுதி-1
‘நாம் இதைச் சாதித்தோம், அதைச் சாதித்தோம்’ என்று அகம்பாவப்பட கொஞ்சம்கூட நியாயம் இல்லை.
நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேக பலமோ எங்கிருந்து வந்தது?
இந்தப் பிரபஞ்ச காரியங்கள் அனைத்தையும் செய்கிற ஒரு மஹா சக்தியிடமிருந்தே நம்முடைய, சக்தி எல்லாம் வந்திருக்கிறது.
அது இல்லாவிட்டால் நம்மால் ஒரு சுவாசம்கூட விடமுடியுமா?
ஒருநாள், இத்தனை சாதித்ததாக எண்ணிக் கர்வப்படுகிற நம்மைவிட்டுச் சுவாசம் போய் விடுகிறது.
அதைப் பிடித்து வைத்துக் கொள்கிற சாமர்த்தியம் நமக்குக் கொஞ்சம்கூட இல்லை. அப்போது நம் சக்தி எல்லாமும் சொப்பனம் மாதிரிப் போய்விடுகிறது.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்கூட, சக்தி சமுத்திரமாக இருக்கப்பட்ட அம்பாளின் ஒரு சிறு துளி அநுக்கிரகத்திலேயே நடக்கிற காரியங்களை, நம்முடையதாக நினைத்து அகம்பாவப்படுவது அசட்டுத்தனம்தான் என்று தெரியும்.
எத்தனைக்கெத்தனை இதை அநுபவத்தில் தெரிந்துகொண்டு அம்பாளுக்கு முன் ஒரு துரும்பு மாதிரி அடங்கிக் கிடக்கிறோமோ அத்தனைக்கத்தனை அவள் அநுக்கிரஹமும் அதிகம் கிடைக்கும்.
அவதார புருஷர்களாக வந்தவர்களும் இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக ரொம்பவும் விநய சம்பத்தோடு வாழ்ந்து காட்டியிருக் கிறார்கள்.
ராமசந்திரமூர்த்தி இப்படித்தான் தர்மத்துக்கும், சத்தியத்துக்கும், சாஸ்திரத்துக்கும் அடங்கி மநுஷ்யன் மாதிரியே நடந்து காட்டினார்.
அவருடைய விநயத்தை நினைக்கிறபோது எனக்குத் தோன்றுகிற ஓர் எண்ணத்தைச் சொன்னால் உங்களுக்கு விசித்திரமாக இருக்கும்.
எல்லோரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்று வருத்தப்படுவார்கள் அல்லவா? எனக்கோ நான் அப்படிப் பிறக்காமல் போனதே நல்லதுதான் என்று தோன்றுகிறது.
ஏன் தெரியுமா? ராமர் தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும் ஆசாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், அவர் வந்து நமஸ்கரிக்கும் படியாக ஆகிவிடும்.
அது எத்தனை தர்மசங்கடமா யிருக்கும்! இப்போதோ அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது.
எதற்குச் சொல்கிறேன் என்றால், சாக்ஷாத் நாராயணனான ராமசந்திரமூர்த்தி விநயமே வடிவமாக இருந்தார்.
அவதாரம் என்பதால் ஜனங்களுக்கு எட்டாத கொம்பிலே இருக்கவேண்டும் என்றில்லாமல் மநுஷ்யராகவே நடித்தார்.
பொது ஜனங்களுக்கு இருக்கிற துக்கம் கஷ்டம் எல்லாம் கூடத் தமக்கு இருக்கிற மாதிரி நடித்தார்.
சீதையைப் பிரிந்ததற்காக அழுதார்; லக்ஷ்மணன் மூர்ச்சித்த போது புலம்பினார்.
சமுத்திர ராஜனிடம் ரௌத்ராகாரமாகக் கோபம் கொண்டார்.
ஜனங்களுக்கு, ‘இவரும் தங்கள் மாதிரி ஒருத்தர்’ என்று பிடிமானம் உண்டாவதற்கே அவதார புருஷர்களுக்கு கோபம், பயம், துக்கம் எல்லாம் வந்த மாதிரி ஓரொரு சந்தர்ப்பங்களில் காட்டிக் கொள்வார்கள்.
கைகால் ஆடுகிற மாதிரி, மனசும் அதனுடைய சாதாரண சுபாவப்படி கொஞ்சம் ஆடிவிட்டுப் போகட்டுமே என்று விட்டுவிடுவார்கள்.
ஆனால் உள்ளூற இவர்கள் இந்த உணர்ச்சி பேதங்களால் பாதிக்கப்படாமல் சாந்தமாகவே இருப்பார்கள்.
உள்ளூறத் தங்கள் ஈசுவரத்தை உணர்ந்தபோதிலும் வெளியே மநுஷ்யர் போல இருப்பார்கள்.
மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக அடக்கமாக இருப்பார்கள். ராமரே அடக்கமானவர் என்றால், புத்தி, தேகபலம் எல்லாவற்றிலுமாக சக்திமானாக இருந்த ஆஞ்சநேயரே அடங்கி அடங்கி இந்த ராமனுக்கும் தாஸனாக இருந்து கொண்டே அசாத்தியத்தை எல்லாம் லகுவாக சாதித்தார்.
#சகலமும்அவளே#
#ஓம்ஶ்ரீமாத்ரேநமஹ#
Comments
Post a Comment