ஆத்தாளை,எங்கள் அபிராம வல்லியை
#நூற்பயன்:
ஆத்தாளை,
எங்கள் அபிராம வல்லியை
,
அண்டம் எல்லாம் பூத்தாளை,
மாதுளம் பூ நிரத்தாளை,
புவி அடங்கக் காத்தாளை,
அங்குச பாசம் குசுமம் கரும்பும்
அங்கை செர்த்தாளை,
முக்கண்ணியைத்,
தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.
#பொருள்
எங்கள் தாயானவளை,
அபிராமி வல்லியை,
எல்லா உலகங்களையும் பெற்றவளை,
மாதுளம் பூப்போன்ற நிறத்துடையவளை,
உலகமெல்லாம் காத்தவளை,
திருக்கரங்களில் மலர் அம்புகள்
ஐந்தையும்,
பாசத்தையும்,
அங்குசத்தையும், கரும்பு வில்லையும் வைத்திருபவளை
மூன்று கண்களையுடைய தேவியைத் தொழுவார்க்கு
ஒரு தீங்கும் நேராது;
உலகில் வளமும் நலமும் பெற்று
வாழ்வர்.
-------------
#பொருளுரை
இது, கி.வா.ஜ, அவர்களின் முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளது.
சில புத்தகங்களிலே,
"அங்கையில், பாசாங்குசுமம் கரும்புவில்லும் சேர்த்தாளை" என்றும் காணப்படுகிறது.
என்றாலும், சாக்த உபாசனையும்,
தமிழ் வல்லமையும் ஒருங்கே நிரம்பிய கி.வா.ஜ. அவர்கள் விளக்கிய படி,
மேலே சொன்னவாறு பாடலை எடுத்துக் கொண்டால், இன்னும் அழகிய பொருள் கிடைக்கிறது என்பதனால், அப்படியே நானும் இங்கே கையாண்டிருக்கிறேன்.
நூற்பயன் சொல்வது என்பது ஒரு மரபு.
இந்த நுலைப் பாராயணம் செய்தால், இன்ன இன்ன பயங்கள் கிட்டும் என்று சொல்வது ஒரு வழக்கம்.
அந்த மரபை ஒட்டியே, இங்கு அபிராமி பட்டரும், அபிராமி அந்தாதியைப் பாராயணம் செய்தால் என்ன என்ன பயன் கிட்டும் என்று சொல்லி முடிக்கிறார்.
அந்த நூற்பயனை,
"ஆத்தாள்" என்ற சொல்லிலிருந்து தொடங்குகிறார் பட்டர்.
'அம்மா! உன்னை பற்றிப் பாராயணம் செய்வதால் என்னதான் கிடைத்துவிடாது" என்று பல பாடல்களிலே சொன்னவர்,
இங்கே, தமிழ் மரபு வழுவாமல், நூற்பயனை பட்டியல் இடுகிறார்.
காப்புச் செய்யுளிலே 'அபிராம வல்லி" என்று சொல்லித் தொடங்கியவர்,
இங்கே, 'அபிராம வல்லி" என்று சொல்லி முடிப்பதும் பொருத்தமானதுதான்.
ஆத்தாளை, எங்களது அபிராம வல்லியைப் பாராயணம் செய்தவர்களுக்கு என்ன கிட்டும்?
எப்பேர்ப்பட்டவள் அவள்?
அண்ட பேரண்டத்தையெல்லாம் படைத்தவள் அவளே!
படைத்தது மட்டுமின்றிக் காத்து ரஷிப்பவளும் அவள்தான்.
மாதுளம்பூ நிறமுடையவள் அவள். அவள், கைகளிலே, ஆயுதங்கள் தரித்துக் கொண்டிருக்கிறாள். எதற்காக? நம்மை எல்லாம் காப்பதற்காகத்தான்.
நான்கு கைகளிலும், நான்கு ஆயுதங்களை அவள் தரித்துக் கொண்டிருக்கிறாள்.
அங்குசம், பாசம், மலர் மற்றும் கரும்பு வில்லை அவள் தனது கைகளிலே கொண்டிருக்கிறாள்.
மூன்று கண்கள் உடையவள் அவள். 'முக்கண்ணி' என்று பெயர் பெற்றவள்.
அவளைத் தொழுவார்க்கு, அபிராமி அந்தாதியை முறைப்படி பாராயணம் செய்வாருக்கு, ஒரு தீங்கும் வாராது - என்று சொல்லி நூற்பயனை முடிக்கிறார் பட்டர்.

Comments
Post a Comment