அபிராமிஅந்தாதிபாடல்99
#அபிராமிஅந்தாதிபாடல்99
.
குயிலாய் இருக்கும்
கடம்பாடவியிடை;
கோல இயல்
மயிலாய் இருக்கும்
இமயாசலத்திடை;
வந்துதித்த
வெயிலாய்
இருக்கும் விசும்பில்;
கமலத்தின்மீது அன்னமாம்;
கயிலாயருக்கு
அன்று இமவான்
அளித்த
கனங்குழையே
#பொருள்
ஏ, அபிராமி!
அன்று கைலயங்கிரித் தலைவனாகிய சிவபிரானுக்கு
மணம் முடித்த மலையரசன் மகளே!
கடம்பவனத்தில் உறைந்த குயிலே! இமயமலையில் தோன்றிய் அழகிய மயிலே! ஆகாயத்தில் நிறைந்திருப்பவளே!
தாமரை மீது அன்னமாக அமர்ந்திருக்கும் திருக்கோலத்
தையுடையவளே!
மதுரையில் குயிலாகவும்,
இமயத்தில் மயிலாகவும்,
சிதம்பரத்தில் ஞானசூரிய ஒளியாகவும்,
திருவாரூரில் அன்னமாகவும்
அம்பிகை விளங்குகின்றாள்
என்பது வழக்கு).
#பொருளுரை
அன்னை எப்படி எல்லாம் இருக்கிறாள்?
எவ்வாறெல்லாம் அருள் பாலிக்கிறாள்?
ஒரு பட்டியல் போடுகிறார் பட்டர்.
கடம்ப வனத்திலே அவள் குயில் போன்று இருக்கிறாள்
#கதம்பவனவாசினி' என்றே அவளுக்குத் திரு நாமம்.
இமய மலையின் மீதோ,
அவள் மயில் போன்று உலவிக் கொண்டிருக்கிறாள்.
கடம்ப வனத்திற்கும், இமயாசலத்திற்கும் செல்ல முடியாத அன்பர் தமக்கு அருள்வதற்கு,
அவள் உலகிலே,
வெயிலாய், கதிரவனின் கிரணங்களாய் வந்து உதிக்கிறாள்
#உதிக்கின்றசெங்கதிர்
என்றுதானே இந்த அந்தாதியையே ஆரம்பிக்கிறார் பட்டர்!
இவை எல்லாம் தாண்டி, அடியார்களின் மனத் தாமரையின் மீது, ஒரு அன்னபட்சி போன்று அவள் அமர்ந்து இருக்கிறாள்.
அன்ன பட்சி என்று அவளைச் சொல்வதும் சரியாகத்தான் இருக்கிறது.
அன்னம், தூய்மையின் அடையாளம். அன்னையும், தூய அடியார்களின் உள்ளத்திலே தூய்மையே வடிவாய் அமர்ந்திருக்கிறாள்.
இவள், கயிலை நாதனுக்கு அன்றொருனாள், இமவான் அளித்த பெண்.
தனது மாங்கல்ய மங்கலச் சின்னத்திற்கு அடையாலமாக,
அவள் காதிலே பெரிய குழை ஒன்று அணிந்திருக்கிறாள். 'தாடங்கம்' எனப்படும் அந்தக் குழையைப் பற்றி,
ஆதி சங்கரர், தனது சௌந்தர்ய லஹரியிலே பெருமையாகச் சொல்லுகிறார் :
'அம்மா! எங்கள் சங்கரருக்கு, விடம் உண்டும் கூட, ஒன்றும் ஆகவில்லை. ஏன் தெரியுமா?
எல்லாம், உனது தாடங்க மஹிமையால்தான்' என்று சொல்லுகிறார்!
இப்படி மங்கலச் சின்னமாக இருக்கும் எம் அன்னை,
குயிலாகவும்,
மயிலாகவும்,
வெயிலாகவும்,
தாமரை மீது இருக்கும் அன்னம் போன்றும் வீற்றிருக்கிறாள் என்று சொல்லி அமர்கிறார் பட்டர்.

Comments
Post a Comment