அபிராமிஅந்தாதிபாடல்96
#அபிராமிஅந்தாதிபாடல்96
கோமளவல்லியை,
அல்லியன்
தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை,
ஏதம் இலாளை,
எழுதரிய
சாமள மேனிச்
சகலகலா மயில்தன்னை,
தம்மால்
ஆமளவும் தொழுவார்,
எழு பாருக்கும் ஆதிபரே
#பொருள்
என் அபிராமி அன்னையை,
இளமையும் அழகும் மிக்க கோமள வல்லியை,
அழகிய மென்மையான தாமரையைக் கோயிலாகக் கொண்டு உறையும் யாமளவல்லியை,
குற்றமற்றவளை,
எழுதுதற்கு இயலாத எழில் கொண்ட திருமேனியுடையவளை,
சகல கலைகளிலும் வல்ல மயில் போன்றவளை,
தம்மால் கூடுமானவரை தொழுகின்ற அடியவர்களே,
ஏழுலகையும் ஆட்சி புரியும் அதிபர்கள் ஆவார்கள்.
#பொருளுரை
நீயே துணை என்று அவளது திருப்பாதங்களில் சரண் புகும் அன்பர்களுக்கு என்ன கிடைக்கும்? எடுத்துச் சொல்லுகிறார் பட்டர்.
அந்த மென்மையே வடிவான அபிராமித்தாயை,
கோமளவடிவான அவளை,
மென்மையான தாமரை மலரிலே வீற்றிருக்கும் அந்த யாமளாகமத்தினால் புகழ் பெற்றவளை,
ஒரு குறைவும் இல்லாதவளை, எழுத்திலேயும், வாக்கிலேயும் சொல்லவொண்ணா, எழுதவொண்ணா அழகுடையவளை, ஸ்யாமள நிறத்தாளை
(பச்சை வண்ணத்தினாளை),
சகல கலைகளிலும் வல்ல மயில்போன்றவளை,
தம்மால் முடிந்த வரையிலும் தொழுபவர்களுக்கு, என்னதான் கிடைக்காது?!
அப்படித் தொழுபவர்கள் ஏழு உலகங்களுக்கும் அதிபர்களாக விளங்குவார்கள்.
அம்பிகைக்கு, 'சாம்ராஜ்யதாயினி' என்றொரு திரு நாமம் உண்டு.
அந்தத் திரு நாமத்திற்கேற்ப,
அவள், ஏழுலக சாம்ரஜ்யத்தையே, தனது அடியார்களுக்குத் தந்து விடுகிறாள் என்கிறார் அபிராமி பட்டர் இந்த 96வது பாடலில் விளக்கிறார்.

Comments
Post a Comment