அபிராமிஅந்தாதிபாடல்93

 #அபிராமிஅந்தாதிபாடல்93



நகையே இஃது; 


இந்த ஞாலம் 


எல்லாம் பெற்ற நாயகிக்கு,


முகையே முகிழ் முலை; 


மானே முதுகண்; 


முடிவுஇல், 


அந்த


வகையே பிறவியும்; 


வம்பே, 


மலைமகள் 


என்பது நாம்;


மிகையே 


இவள்தன் 


தகைமையை 


நாடி விரும்புவதே            


#பொருள்


உலகமெல்லாம் பெற்றெடுத்த தலைவியாகிய அபிராமி அன்னையின் திரு மார்பகங்களைத் தாமரை மொட்டு என்கிறார்கள்.


கருணை ததும்பி நிற்கும் முதிர்ந்த கண்களை, 


மருட்சி மிக்க மான் கண்கள் என்கிறார்கள். 


முடிவில்லாதவள் என்றெல்லாம் பக்தர்கள் கூறுகின்றார்கள்


இவையெல்லாமே மாறுபட்ட கூற்றுகள். 


இவைகளை நினையும் போது எனக்கு நகைப்பே உண்டாகிறது.


இனிமேல் நாம் செய்யக்கூடியது இத்தகைய கற்பனைகளைத் தள்ளி அவளின் உண்மை நிலையை அறிதலேயாகும்.


#பொருளுரை


குழந்தைகள் பெற்ற ஒரு பெண்மணிக்கு, ஸ்தனங்கள் சற்றே தளர்ந்து, தாழ்ந்து இருக்கும். 


ஆனால், உலகையே பெற்றெடுத்த பெண்மணியாம் எம் அன்னைக்கு, ஸ்தனங்கள் தாமரை மொட்டு போல் இருக்கின்றன! 


இது வியப்பானது இல்லையா!!


முதுமை அடைந்துவிட்ட ஒரு பெண்மணிக்கு, கண்கள் மருளாது.


இளவயதுப் பெண்ணுக்கே, மான் போன்ற மருண்ட கண்கள் இருக்கும்.


ஆனாலும்,


 இங்கு,


அந்த அபிராமித் தாய்க்கும்கூட, கண்கள், மானின் கண்கள் போன்று, மருண்டவாறு அமைந்திருப்பது வியப்பானது இல்லையா!


"நித்ய யௌவனா" 


என்று அல்லவா அவள் கொண்டாடப்படுகிறாள்!!


என்றென்றும் இளமையுடன், 


அந்த இளமைக்குரிய தோற்றத்துடன், மருண்ட கண்களுடனும், 


தாமரை மலர்கள் போன்று கூம்பிய நகில்களுடனும் அல்லவா அவள் காட்சி தருகிறாள்!!


இது மட்டும் இல்லை. 


இவளுக்கு, ஜனன மரணமே கிடையாது. 


அப்படி இருக்க,


இவள், 


தட்சனுக்கும், இமவானுக்கும் பெண்ணாக அல்லவோ பிறந்திருக்கிறாள்! 


இமவான் புத்ரியாக இவள் பிறந்ததனால்தானே இவளை,


 'மலைமகள்' என்றே 


நாம் கொண்டாடுகிறோம்!


இவளது தன்மையை நம்மால் ஆராய்ந்து அறிந்து விட முடியுமா என்ன? 


நிச்சயம் முடியாது.


அன்னை அபிராமி,


 தனது அடியார்களுக்கு ஏற்றாற்போல் காட்சி அளிக்கிறாள். 


அவளது தன்மைகளையும், தோற்றத்தையும், முழுவதுமாக ஆராய்ச்சி செய்து கண்டுவிட 


நம்மால் முடியுமா என்ன? 


இது நம்மால் ஆகாத காரியம் என்று முற்றுப் புள்ளி வைக்கிறார் பட்டர்.

Comments

Popular posts from this blog

லலிதா சகஸ்ரநாமம்

அம்பாளின் தாடங்க மஹிமைப் பற்றிய வர்ணணை.

அம்பாள் இருக்க அஹம்பாவம் ஏன்? :