அபிராமிஅந்தாதிபாடல்92
மெல்லிய நுன் இடை மின் அனையாளை விரிசடையோன்
#அபிராமிஅந்தாதிபாடல்92
புல்லிய மென் முலைப்
பொன் அனையாளை,
புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம்
தொழும் அடியாரைத்
தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்தெழ,
வெண் பகடூரும்
பதம் தருமே
#பொருள்
அபிராமித் தேவி!
நீ மின்னல் போலும் மெல்லிய இடையினை உடையவள்;
விரிந்த சடைமுடி நாதர் சிவபிரானோடு இணைந்து
நிற்கும் மென்மையான முலைகளையுடையவள்;
பொன்னைப் போன்றவள். இவ்வாறாகிய உன்னை வேதப்படி தொழுகின்ற அடியார்க்கும் அடியவர்கள்,
பல்வகை இசைக்கருவிகள் இனிதாக முழங்கிவர,
வெள்ளையானையாகிய ஐராவதத்தின் மேலே ஊர்ந்து செல்லும் இந்திரப் பதவி முதலான செல்வ போகங்களைப் பெறுவர்.
#பொருளுரை
அன்னை அபிராமியைத் தொழுபவர்கள் எதைத்தான் அடைய மாட்டார்கள்?
அந்த மெல்லிய இடை உடைய எம்பெருமாட்டியை,
அந்த மின்னல் போலும் ஒளி பொருந்திய எம் தேவியை,
அந்த விரிசடையோனாகிய சிவபெருமானை அணைத்து நிற்கும் எம் அபிராமித் தேவியை,
தினம் தினம் தொழுது, அந்த வேதத்தில் கூறிய வண்ணம் பூசை செய்து வந்தவர்களுக்கு மட்டுமல்ல,
அந்த அடியாரின் அடியாருக்கும் கூட இந்திர லோகமல்லவா காத்து இருக்கிறது!
பல்வகை இசைக்கருவிகள் முழங்கி வர, வெள்ளை யானையாகிய ஐராவத்தின்மேலே வைத்து செல்லப்படும் அந்த இந்திரப் பதவியும் போகங்களும்கூட அல்லவா அவர்களுக்குக் கிடைத்துவிடும்!
அந்தப் பாதம் எந்தப் பதம்தான் தந்து விடாது!!
இப்படி, அந்தத் தாயாரின் அடியாரின் அடியாருக்கும் கூட இந்திரப் பதவி கிட்டி விடுமானால்,
அவளையே நினைத்து,
தியானம் செய்ய்யும் அவளது அன்பர்களுக்கு,
என்னதான் கிடைத்து விடாது!!
#ஓம்ஶ்ரீஅபிராமிதாயே#

Comments
Post a Comment