அபிராமிஅந்தாதிபாடல்89
#அபிராமிஅந்தாதிபாடல்89
சிறக்கும் கமலத் திருவே!
நின் சேவடி சென்னி வைக்கத்
துறக்கம் தரும நின்
துணைவரும் நீயும்,
துரியம் அற்ற
உறக்கம் தர வந்து,
உடம்போடு உயிர் உறவு அற்று
அறிவு மறக்கும் பொழுது,
என் முன்னே வரல் வேண்டும்
வருந்தியுமே
#பொருள்
அபிராமித் தாயே!
சிறந்த தாமரையில் வீற்றிருக்கும் செல்வமே!
என்னுடைய
உயிருக்கும், உடலுக்கும் தொடர்பற்று,
அறிவு மறதி மிகுந்து இருக்கும் வேளையில்
உன்னுடைய சேவடி என்னுடைய சென்னியில் படர வேண்டும்.
மேலும்,
பற்றின்மையை அனுக்கிரகிக்கும் உன்னுடைய துணைவரும் வந்து மோன நிலையில் நான் அறிதுயிலில் அமரும் பேற்றை அருள வேண்டும்.
#பொருளுரை
அம்பிகை தாமரையிலே வீற்றிருக்கிறாள்.
அவள், மனத் தாமரையிலும்கூட வீற்றிருப்பவள்தான்.
சஹஸ்ராகாரம் எனப்படும் அந்தத் தலையில் உள்ள தாமரையிலே அவளது திருவடி பட்டுவிட்டால்,
அந்த மனிதன் நிர்விகல்ப சமாதி நிலையையும் தாண்டிய இன்பம் அடைகிறான் என்பது சக்தி வழிபாடு செய்பவர்களின் கோட்பாடு.
இதனையே பட்டர்
இப்போது தெரிவிக்கிறார்.
அம்மா!
நீ தாமரை மலரிலே வீற்றிரிக்கிறாய்.
எனது மனத் தாமரையிலும் நீயே நிறைந்து இருக்கிறாய்.
எனது மரணத் தருவாயில்,
இந்த உடலோடு, உயிர் கொண்ட உறவு அற்றுப் போகும் காலத்தில், இந்த அறிவு மயங்கி,
ஏதும் அறிய முடியாத நிலையை அடையும்போது, நீ இங்கே உனது துணைவருடன் வர வேண்டும்.
எனது தலையிலே உனது திருவடித் தாமரைகள் பட வேண்டும். அதன் மூலமாக, எனக்கு, #துரியம்' என்ப்படும் அந்த உயர்ந்த நிர்வி கல்ப சமாதி நிலையையும் தாண்டிய பேரின்ப நிலையை நீ அளிக்க வேண்டும்.
இதற்கு, நான் தகுதியானவந்தானா என்று எனக்குத் தெரியாது. ஆனாலும்கூட, நீயே மனமுவந்து அருள்செய்து, என் மரனத் தருவாயில், வந்து காப்பாற்ற வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறார்.

Comments
Post a Comment