அபிராமிஅந்தாதிபாடல் 84
அபிராமிஅந்தாதிபாடல் 84
உடையாளை,
ஒல்கு செம்பட்டுடையாளை,
ஒளிர்மதிச் செஞ்ச்சடையாளை,
வஞ்சகர் நெஞ்சடையாளை,
தயங்கு நுண்னூல்
இடையாளை,
எங்கள் பெம்மான் இடையாளை,
இங்கு என்னை
இனிப்படையாளை,
உங்களையும்
படையாவண்ணம்
பார்த்திருமே
#பொருள்
ஏ அடியார்களே! என் அபிராமி,
இடையில் ஒளிவீசும் செம்பட்டு அணிந்தவள்.
ஒளி வீசும் பிறைச் சந்திரனை அணிந்த சடையை உடையவள்.
வஞ்சகர்களின் நெஞ்சிலே குடி கொள்ளாதவள்.
ஒளி விளங்கும் நுண்மையான நூலிடையாள்.
சிவபெருமானின் இடப்பாகத்தில் குடி கொண்டவள்.
என் அன்னையாகிய இவள் அந்நாள் என்னை அடிமையாகக் கொண்டாள். என்னை இனி இவ்வுலகில் பிறக்க வைக்க மாட்டாள்.
அத்தகைய தேவியை நீங்களும் தொழுது போற்றுங்கள்.
நீங்களும் பிறவி எடுக்காப் பேறெய்த அவளையே தியானம் செய்யுங்கள்.
#பொருளுரை
அவள் நமக்கெல்லாம் தலைவி. நம்மைத் தனது அடிமையாய்க் கொண்டவள்.
அதனால், 'உடையாளை' என்று தொடங்கினார் பட்டர் இங்கே. நம்மையெல்லாம் தனது உடைமையாய்க் கொண்டவள் எப்படி இருக்கிறாள்?
சென்னிற பட்டாடை உடுத்தி இருக்கிறாள்.
ஒளிரும் மதியைத் தனது தலையிலே, செஞ்சடையிலே சூடி இருக்கிறாள். நுண்ணிய இடை கொண்டு விளங்குகிறாள்.
அவள், எங்கள் பெருமான்,
ஈசனின் இடப்பக்கத்திலே குடி கொண்டு இருக்கிறாள்.
அடியவர்களின் நெஞ்சிலே குடி புகும் அவள்,
வஞ்சகரின் நெஞ்சத்திலே ஒரு போதும் நுழைய மாட்டாள்.
அவள், என்ன செய்து விட்டாள் தெரியுமா?
அவள் என்னை ஆட்கொண்டுவிட்டாள்!
என் பிணி எல்லாம் போக்கி விட்டாள்.
என்னை இனிப் படையா வண்ணம் தன்னகத்தே கொண்டு விட்டாள்.
அவள் அடி பணிந்தால், அவள் உங்களுக்கும் அருள் புரிவாள்.
உங்களையும் படையா வண்ணம், பிறவி என்பதே வராத வண்ணம், பார்த்துக் கொள்வாள்.

Comments
Post a Comment