அபிராமிஅந்தாதிபாடல்83#
விரவும் புது மலர் இட்டு,
நின் பாத விரைக்கமலம்
#அபிராமிஅந்தாதிபாடல்83#
விரவும் புது மலர் இட்டு,
நின் பாத விரைக்கமலம்
இரவும் பகலும் இரைஞ்ச வல்லார்,
இமையோர் எவரும்
பரவும் பதமும்,
அயிராவதமும், பகீரதியும்,
உரவும் குலிகமும்,
கற்பகக் காவும் உடையவரே
#பொருள்#
அன்னையே, அபிராமி!
உன்னுடைய மணம்மிக்க திருவடித் தாமரைகளில் தேன் சிந்தும் புதுமலர்களை வைத்து
இரவு, பகலாக தியானம் செய்யும் பெரியோர்கள்,
தேவர்கள் முதலிய யாவரும்
இந்திர பதவி, ஐராவதம் என்ற யானை, ஆகாய கங்கை, வலிமையான வஜ்ஜிர ஆயுதம், கற்பகச் சோலை முதலியவைகளை முறையாகப் பெற்று பெருவாழ்வு வாழ்கின்றனர்.
(எனக்கும் அருள்வாயாக!)
#பொருளுரை#
அந்த அன்னையின் பாத கமலங்களிலே,
மலரிட்டு பூசனை செய்பவர்கள் என்னவெல்லாம் அடைவார்கள் என்று பட்டியலிடுகிறார் பட்டர்.
அந்த அன்னையின் பாதங்களே மலர்கள் போன்றுதாம் இருக்கின்றன. அந்த மலர்த்தாள்களிலே
நாம் புது மலரிட்டுஅவளைத் தொழுதால், அவள் நமக்கு என்னதான் தர மாட்டாள்?
அந்த அன்னை, நமக்கு, என்ன தேவையோ,
அவை அனைத்தும் தருவாள். நமக்கு என்ன விருப்பமோ, அவையும் தருவாள்.
அவள் பாதங்களிலே நறுமலர் இட்டு, அவளையே இரவும் பகலும் நினைத்து இருப்பவர்க்கு,
அவள் அளிக்கும் பரிசுகள் பல.
அந்த தேவர்களின் நல் வாழ்க்கையையே அவள் தந்து விடுகிறாள்.
அந்த தேவேந்திரன் அமர்ந்து வரும் யானையான ஐராவதம் அந்த அன்னையின் அடியாருக்கெனத் தயாராக இருக்கிறது.
அடியார்கள் நீராட, அந்த ஆகாய கங்கையே இறங்கி வருகிறாள். ஏந்தி வருவதற்கு, குலிகமான வஜ்ராயுதமும் கிடைக்கிறது.
இவை யாவற்றுக்கும் மேலாக, கற்பக மரங்களும் கிடைக்கின்றன.
ஒரு கற்பக மரமே கேட்ட அனைத்தையும் தர வல்லது.
அப்படி இருக்க, கற்பகச் சொலையே தந்து விடுகிறாளாம்
அந்த அபிராமி!
அடியார்கள் கேளாமலே அனைத்தையும் தந்து
விடுகிறாள் அவள்.
இவ்வுலக வாழ்விலும் சரி,
அவ்வுலக வாழ்விலும் சரி,
நாம் கேட்ட அனைத்தையும், ஏன், கேட்காத பரிசுகளையும் கூட அந்த அன்னை நமக்கு அளித்து விடுகிறாள் என்று சொல்லுகிறார் பட்டர்.

Comments
Post a Comment